விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி இறந்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்
கர்நாடக மாநிலம் மாலூர் தாலுகா பெனிகட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி அஸ்வினி (வயது23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த சனிக்கிழமை உடல் நல பாதிப்பால் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவருக்கு ரத்த உயர் அழுத்தம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அஸ்வினியின் உயிரிழப்புக்கு டாக்டர்களின் தவறான சிகிச்சையே காரணம் என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மனு வழங்கினர்.