அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள டிரைவர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் யோகராஜ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டிரைவர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும். டிரைவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.