பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் கலந்தாய்வு தேதி கோடை விடுமுறையில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் சூழலில் சுமார் 6 முறை தேதி மாற்றி அமைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.
மேலும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்யக் கோரியும் நாளை(திங்கட்கிழமை) கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் உள்ள பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் முன்பு நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.