வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தாக்கப்பட்டு உள்ளார். அவரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வருவாய் ஆய்வாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ராசிபுரம், பரமத்திவேலூர்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் செங்கமலை உள்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதை தடுக்க கோரியும், இனிவரும் காலங்களில் வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முத்துசெழியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மோகனூர், சேந்தமங்கலம்
மோகனூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி புவனேஸ்வரி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சங்க கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகி காரல் மார்க்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல துணை தாசில்தார் மதன் முன்னிலையில், தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.