வையப்பமலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு
திருச்செங்கோடு அருகே வையப்பமலை பஸ் நிறுத்தத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஜன் சரண்சிங் எம்.பி.-ஐ கைது செய்ய வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் கொடுமை செய்த எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல நாட்களாக விளையாட்டு வீரர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவான சூழ்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய உதவி செயலாளர் விஜய், ஒன்றிய துணைத் தலைவர் வேலு, வையப்பமலை கிளை தலைவர் மோகனப்பிரியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், லட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், சி.ஐ.டி.யு. தலைவர்கள் வெங்கடாசலம், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.