மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் கரூரான் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வட்ட துணை தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் பவுனேசன், சக்திவேல், முனியம்மாள், சரவணன், இளங்கோவன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாங்கரை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் நான்கு மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசும் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கணக்கில் முறையாக ஊதியத்தை செலுத்த வேண்டும். மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், ஊராட்சி செயலர் மாதையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.