ஓமலூரில் ஜல்லி, கிரஷர் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ஓமலூரில் ஜல்லி, கிரஷர் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2023 1:19 AM IST (Updated: 3 July 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் ஜல்லி, கிரஷர் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் லாரிகளுடன் நின்று கோஷங்கள் எழுப்பினர்

சேலம்

ஓமலூர்,

ஓமலூரில் ஜல்லி, கிரஷர் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது லாரிகளுடன் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

கிரஷர், ஜல்லி உரிமையாளர்கள்

தமிழகம் முழுவதும் கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, ஜல்லி கிரஷர்களுக்கு அரசு விதித்துள்ள புதிய நடைமுறையை தளர்த்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் பெயரில் ஜல்லி கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜல்லி கிரஷர், கல்குவாரிகளில் இயக்கப்படும் டிப்பர் லாரிகள் 200-க்கும் மேற்பட்டவை, ஓமலூர் பைபாஸ் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிலேயே அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

3-வது நாளாக...

இந்த நிலையில் நேற்று ஓமலூர் பைபாஸ் ரோட்டில் டிப்பர் லாரிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் 3-வது நாளாக ஜல்லி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், டிரைவர், கிளீனர்கள், பணியாளர்கள் திரண்டு அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி நின்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் மட்டும் 65 கல்குவாரிகள், 70 ஜல்லி கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள், டிப்பர் லாரி டிரைவர், கிளீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக முழுவதும் ஒரு நாளைக்கு ரூ.1,300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்களை அழைத்து பேசி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

அப்போது சங்க உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பழனியப்பன், மணிவண்ணன், திருஞானம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story