இலவச மின்சாரம் துண்டிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்


இலவச மின்சாரம் துண்டிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

விவசாயி வயலில் இலவச மின்சாரம் துண்டிப்பை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

விவசாயி வயலில் இலவச மின்சாரம் துண்டிப்பை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் சேகர் என்ற விவசாயி 6 ஏக்கரில் இலவச மின்சார திட்டத்தில் பாசனம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சேகர் நிலத்திற்கு அருகாமையில் நீர் நிலை உள்ளதாகவும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி தாசில்தாராக இருந்த ஜெகதீசன் உத்தரவின்பேரில் சேகர் நிலத்தில் இலவச மின்சாரத்தை மின்துறை அதிகாரிகள் துண்டித்து உள்ளனர்.

அதனை தொடர்ந்து சேகர் தனது 6 ஏக்கர் நெற்பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சிப்புயல் விவசாய சங்கத் தலைவர் விஜய் கீர்த்தி தலைமையில் நேற்று காலை ஆரணி தாலுகா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில பொருளாளர் ரவி, மாவட்ட செயலாளர் பெருமாள் ஒன்றிய தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது சம்பந்தமாக தொடர்ந்து நில அலுவலர், தாசில்தார் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story