அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடா்பாக பா.ஜ.கவினர் 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஆன்மிக பிரிவு சார்பில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
100 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், அவர்களை சாலையைவிட்டு விலகி நிற்கும்படி கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரளாக சென்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இருப்பினும் அவர்களை மீறிச்சென்று, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பழனியில் ஆர்ப்பாட்டம்
இதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரை கண்டித்து பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் பழனி வடக்கு கிரிவீதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அமைச்சர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
முன்னதாக கோவில் அலுவலகம் முன்பு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார், அங்கு திரண்டிருந்த பா.ஜ.க.வினரிடம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதியில்லை, மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினர். ஆனால் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 122 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.