பட்டா வழங்கியவர்களுக்கு நிலம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிந்தலவாடி ஊராட்சி பகுதியில் பட்டா வழங்கியவர்களுக்கு நிலம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து அத்துக்கள் நட்டு உரிய பயனாளியிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் இந்த ஊராட்சியில் வசிக்கும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் ஏழை,எளிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் குளித்தலை தாசில்தார் அலுவலக வளாகத்திற்கு வந்த அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுமனை பட்டா பெற்று இடம் பெறாத நபர்கள் புதிதாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் என சுமார் 350 பேர் கூடினர். குளித்தலை தாசில்தார்அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று தாசில்தார் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர்.
பின்னர் அங்கிருந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் தங்கள் மனுக்களை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பின்னர் கலைந்து சென்றனர்.