அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாமரைக்குளம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உள் நோக்கத்துடனும், பழிவாங்கும் போக்குடனும் தற்காலிக பணி நீக்கம் குற்றச்சாட்டு குறிப்பாணை எவ்வித தடையுமின்றி முற்றாக விலக்கி ஆணையிட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அலுவலர்களை வறுமையிலும் கண்ணியமற்ற தடித்த வார்த்தைகளிலும் பேசுவதை கண்டிப்பதோடு இனி அதுபோல் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு இரவு 6 மணிக்கு மேலும் விடுமுறை தினங்களிலும் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பாரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.