மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள் தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:-
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். ஆனால் தி.மு.க. தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதோடு மக்களுக்கு எதிராக சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இல்லை. ஆகவே வருகிற காலங்களில் அ.தி.மு.க. அரசு அமைவதற்கு நீங்கள் எல்லாம் துணையாய் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
இதில் முன்னாள் எம்.பி. காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர் மற்றும் சின்னசேலம் ஒன்றிய நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
ரிஷிவந்தியம் ஒன்றியம்
ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் கதிர்.தண்டபாணி, அருணகிரி, துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மணலூர்பேட்டை நகர செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு கலந்துகொண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வந்த நலத்திட்டங்களை ரத்து செய்ததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.
இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் சின்னராஜ், கஜேந்திரன், காந்தி, சண்முகம், ராமதாஸ் துணைத் தலைவர் மாரிமுத்து, அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் மேற்கு, கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விருகாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. காமராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் பாஷா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய துணை செயலாளர் சாமிதுரை, நகர துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கதிர்வேல், நகர அம்மா பேரவை செயலாளர் வேல்நம்பி, மாவட்ட பிரதிநிதிகள் மணிவண்ணன், குமரவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு ஒன்றிய பொருளாளர் அழகுவேல் நன்றி கூறினார்.