வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவராக இருந்த சம்பத்தின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 சதவீதத்தையும் முடித்து தமிழகத்திலேயே அரியலூர் மாவட்டம் தான் முதலில் 100 சதவீதத்தையும், அதிக உறுப்பினர்களை சேர்த்தோம் என்ற பெயரையும் வாங்க வேண்டும். வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முன்பு விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அனைத்து அணியினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழக அரசை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து அதிக அளவில் தொண்டர்களை கலந்து கொள்ள அழைத்து வர வேண்டும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில் உள்பட அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.