விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் குமார், அன்பஜெகன், சேகர், பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். பரஸ்பர பணிமாறுதலுக்கு மறுபணி உத்தரவு வழங்காமல் பணியாளரது பணி ஏற்பு அறிக்கை பெற்றுக்கொள்ள விழுப்புரம் மேற்கு இளமின் பொறியாளருக்கு அறிவுறுத்திய விழுப்புரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சி.பி.எஸ். திட்டத்தில் உள்ள ஓய்வுபெற உள்ள ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஓய்வுபெறும் தேதியன்றே சி.பி.எஸ். முதிர்வு தொகை முழுவதையும் வழங்க வேண்டும், விழுப்புரம் மின் திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய பிரிவு அலுவலகங்களான பூத்துறை, காட்ராம்பாக்கம், நல்லாளம், நடுக்குப்பம் ஆகிய பிரிவுகளுக்கும் மற்றும் துணை மின் நிலையங்களுக்கும் உரிய அனைத்து பதவிகளையும் அனுமதி பெற்று தராததை கண்டித்தும், விழுப்புரம் வட்ட சிவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வாரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட முடிவில் வட்ட பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.