மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

பயிர்க்கடன்

பயிர்க்கடன்கள் வழங்கப்படும்போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் அதிகாரிகளால் வாய்மொழியாக தளர்த்தப்பட்டு குறியீட்டை எய்த நிர்பந்திக்கப்படுகிறது. இவ்வாறு கொடுத்த கடன்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு செயலாளரும் விருப்பப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்பதை கருத்தில் கொண்டு இது தொடர்பாக சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட வேண்டும்.

கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகைக்கு சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதிப்பயனை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட்டு இழப்பு தொகையை நட்ட கணக்கிற்கு எடுத்து செல்ல நிபந்தனையற்ற தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

12 அம்ச கோரிக்கைகள்

சங்க செயலாளர்கள் பொதுப்பணி நிலைதிறன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களை எழுத்து பூர்வமாகவும், நேரிலும் தெரிவித்துள்ளோம். இதில் இனியும் காலதாமதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்து செயலாளர்கள் பாதுகாப்பான வகையில் பணிபார்க்கும் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வரத்தினம், பொருளாளர் பிரபாகர், ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜன், கூட்டுறவு ஓய்வுபெற்ற நல சங்க தலைவர் சீரங்கராயன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story