அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள்
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு மெண்டார் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும். கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில் ஒரு சுகாதார வட்டாரத்திற்கு ஒரு மெண்டார் செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து அதில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களின் சுகாதார மாவட்டத்திற்கு தேவையான மெண்டார் செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து அதில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும்.
கிராமப்புற மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தி அவர்களுக்கு தரமான, இலவச சிகிச்சை கிடைப்பதற்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம் 6 செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நதியா தலைமை தாங்கினார். இதில் ஷீலா, மீனா, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சாமிவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.