திருவாரூரில், அரசு ஊழியர்கள் தர்ணா
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரத்து செய்ய வேண்டும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுக்க வேண்டும்.
தர்ணா போராட்டம்
அனைத்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாநில செயலாளர் கோதண்டபாணி, சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.