நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சர்வே செய்யும் பணிக்கு சென்ற சர்வேயரை பணி செய்யவிடாமல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் அமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கல்பனா, மாநில துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சர்வே பணிக்கு சென்ற சர்வேயரை அவமானப்படுத்தி தாக்கி மிரட்டல் விடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பல்வேறு இடங்களில் சர்வே பணிக்கு செல்லும் சர்வேயர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சர்வேயர்கள் கலந்து கொண்டனர்.