உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நகராட்சி, பஞ்சாயத்து பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, டேங்க் ஆபரேட்டர், தூய்மைப்பணியாளர், தூய்மை காவலர், உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினா். மாவட்ட செயலாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் சிதம்பரம், நிர்வாகிகள் சிவகாமி, மாதம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை தலைவர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நிரந்தரமற்ற வேலை முறையை புகுத்தும் அரசாணைகள் கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். 50 வயது முடிந்த தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும். உள்ளாட்சி, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், தினக்கூலி தூய்மை பணியாளர்கள், டேங் ஆபரேட்டர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். பேரூராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசாணை 62 சி-யின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கிராம உள்ளாட்சிகளில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களை நிரந்தரப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story