உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிவேல், துணைத்தலைவர் பொம்மையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயப்பாண்டி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பள உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.