உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் நடன சபாபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன், மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில பொது செயலாளர் கலியமூர்த்தி, தூய்மை பணியாளர் சங்கர், மாநில தலைவர் சக்திவேல் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து எடுத்துக்கூறினர். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பணி பதிவேடு தொடங்க முறையாக வழங்கப்படாமல் உள்ள சீருடை, கையுறை, முகக்கவசம் மற்றும் பணி தளவாடப் பொருட்களை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற அனைத்து அடிப்படை பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து, அனைவரையும் குடும்ப பாதுகாப்பு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.