அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அனைத்துத்துறை ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை குறைபாடு இல்லாமல் வழங்கிட வேண்டும். அனைத்து நோய்களுக்கான முழுமையான செலவு தொகையை வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அக விலைப்படி வழங்கிட வேண்டும். நிலுவை தொகை பிடித்தமின்றி வழங்கிட வேண்டும். 20 சதவீத உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் ஆகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story