கள்ளக்குறிச்சியில்வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாரியாப்பிள்ளை, மாநில துணைப் பொதுச் செயலாளர் சையத்காதர், மாவட்டத் துணைத் தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் ராஜி, மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சங்க கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா். ஆர்ப்பாட்டத்தில் துணை தாசில்தார் பதவி இறக்கத்தை ரத்து செய்து மீண்டும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தேர்தல் பிரிவில் தேர்தல் ஆணைய நிரந்தர பணியாளர் இல்லாத நிலையில் தற்போது பணியில் உள்ள கணினி பணியாளர்களை நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி இந்திரா, மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






