வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி வருவாய் ஆய்வாளர் மீதான தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
விழுப்புரம்
கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது மணல் கொள்ளையர்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், இத்தகைய கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடபதி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சாருமதி, மாவட்ட இணை செயலாளர் விமல்ராஜ், விழுப்புரம் வட்ட தலைவர் கண்ணன், வட்ட செயலாளர் சக்திதாசன், செயற்குழு உறுப்பினர்கள் யுவராஜ், தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
9 இடங்களில்
இதேபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட இணை செயலாளர் விமல்ராஜ் தலைமையிலும், வானூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் வட்ட நிர்வாகி வித்யாதரன் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகரன் தலைமையிலும், திண்டிவனத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் கணேஷ் தலைமையிலும், செஞ்சியில் மாவட்ட பொருளாளர் கண்ணன் தலைமையிலும், மேல்மலையனூரில் வட்ட நிர்வாகி வேல்முருகன் தலைமையிலும், மரக்காணத்தில் வட்ட நிர்வாகி சுந்தரராஜன் தலைமையிலும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கராபுரம்
இதைபோல் திருச்சி மாவட்டம், துறையூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்யாணி, வட்ட தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட செயலாளர் ஆனந்த், வட்ட பொருளாளர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர்கள் நிறைமதி, அன்பழகன் மற்றும் வட்ட கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.