சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது இதற்கு மாநில தலைவர் வெங்கிடு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிங்கராஜா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.
சாலை பணியாளர்களின் 41 மாதபணிநீக்க காலத்தை எந்த விதமான பலன்களும் பொருந்தாத வகையில் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, 41 மாதகால பணிநீக்கத்தை பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதிய பலன்களும், பணி கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும்,
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
அரசாணை 338 நிதித்துறை ஊதியப் பிரிவு 26.8.2023-ன்படி சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா பணியாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், பணி அமைப்பு உயர் அலுவலர்கள் பணி வரன்முறை செய்த தேதி கொண்டு கோட்ட முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது.
வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்திஜெயந்தி அன்று ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த கையெழுத்து படிவங்களை வருகிற அக்டோபர் மாதம் 13-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் முகாம் அலுவலகத்தில் வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.