ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கிராம ஊராட்சியில் பணியாற்றும் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியம் ரூ.11 ஆயிரத்து 50 வழங்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 36 ஊதியம் அரசாணைப்படி வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணியாற்றும் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்டத்தலைவர் சந்தானம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சிவாஜி, உள்ளாட்சி மாவட்ட செயலாளர் அய்யத்துரை, நிர்வாகிகள் வாசுதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில், நிர்வாகிகள் ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.