ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேற்கு ஆரணி, போளூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணை செயலாளர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) பணிபுரிந்து வரும் சந்தோஷ்குமார் என்பவர் பொறுப்பேற்ற 3 மாத காலத்திற்குள் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து 221 ஊழியர்களை பணியிட மாறுதல் செய்துள்ளார்.
மாவட்ட திட்ட இயக்குனரின் ஒப்புதல் பெறாமல் ஊழியர்களை பணியிடை மாறுதல் செய்து உள்ளார்.
அவரது ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக உணவு இடைவெளியின் போது ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மிருளாளினி மற்றும் அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.