ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிடுவதுடன் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தூய்மை பாரத இயக்க வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி உடனடியாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.