சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பதிவுத்துறை சார்பதிவாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றவாறு மனைபதிவை எளிமைப்படுத்த வேண்டும். மனைபதிவில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணி அமர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.