கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சரண்ராஜ், கோட்ட செயலாளர் சுதாகர், வட்டத்தலைவர் ஸ்ரீராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சந்திரவதனன் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் தனவேல் நன்றி கூறினார்.
சிதம்பரம்
இதேபோல் சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட போராட்ட குழு தலைவர் ராமன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலமுருகன், வட்ட துணைத்தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த உறுப்பினர் திருவேங்கடம் கண்டன உரையாற்றினார். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட இணை செயலாளர் விவேகானந்தம், வட்ட பொருளாளர் சண்முகப்பிரியா உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் ஷேக் சிராஜுதீன் நன்றி கூறினார்.