கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்ட முகவர் மணிமாறன், வட்ட செயலாளர் நவநீதன், மகளிர் அணி தலைவி ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், ரவி ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேசினா்.

குத்தாலம்

இதேபோல குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க குத்தாலம் வட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினர். ஆா்ப்பாட்டத்தில் குத்தாலம் வட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் திருமலைசங்கு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அருள், வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததாக தூத்துக்குடி மாவட்ட போலீசாரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் நெப்போலியன், வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.


Next Story