காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடியே சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஊதிய தொடராணை வழங்கிட வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்க வேண்டிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும். ஊதிய வெட்டுக்கு வழிவகுக்கும் அரசாணைகளுக்கு எதிரான, 5 சதவீத பி.பி. தொடர்பான இயக்குனரக சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். களப்பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையில் இருந்து முழுமையாக விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

11-ந் தேதி மண்டல அளவில்...

முன்னதாக அவர்கள் கோரிக்கை தொடர்பான மனுவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு முதன்மை செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் முத்துவடிவேலிடம் அளித்தனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக வருகிற 11-ந் தேதி மண்டல அளவில் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்திலும், மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் இயக்குனர் அலுவலக வளாகத்தில் 36 மணி நேரம் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொள்வதகாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

---


Next Story