சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடையார்பாளையம்:
திருச்சியில் இருந்து சிதம்பரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று, தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த சாலையின் இடைப்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி பகுதியிலும் சுங்கச்சாவடியானது விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி மணகெதி சுங்கச்சாவடி முன்பு பொதுமக்கள் மற்றும் அகில இந்திய உழைப்பாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சுங்கச்சாவடியானது 60 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படாமல், விதிமுறைகளை மீறி 30 கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பு அடைவார்கள். எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது எச்சரிக்கை விடுத்தனர்.