விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முறையாக நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முறையாக நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பதிவு செய்தே பெற வேண்டும். பெறப்படும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளை பொருட்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து கணக்கிட்டு, விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக அவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் நாராயணசாமியின் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.