பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உமாதேவி, வாலிபர் சங்க கிளை தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி ஆகிய கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து தர வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தாதம்பேட்டை தோப்பு தெரு முதல் தா.பழூர் ஒன்றிய அலுவலகம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். ஒன்றிய அலுவலக வாயிலில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒன்றிய அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், குருநாதன் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.