கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சி.ஐ.டி.யு. ஊழியர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சிகளில் 20 வகையான நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியார் கைகளில் அளிக்கும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, சுய உதவி குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுனர்கள், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் 2 நாள் ஊதியத்தை பறிமுதல் செய்யும் சட்ட விரோத போக்கினை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.