பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் வாழ்வாதாரம் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணை செயலாளர் முத்து கருப்பன் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் எங்களை போன்ற சிறப்பாசிரியர்கள் 13 கல்வி ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்ய கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2016, 2019, 2021-ம் ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மனு

அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக தீர்வாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேரப்பணி மற்றும் மாத ஊதியம் ரூ.28 ஆயிரம், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிப்பதிவேடு நிறைவேற்ற வேண்டும். அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181-ஐ உடனடியாக நிறைவேற்ற கோரியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற இல்லையென்றால் வருகிற 21-ந்தேதி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வாழ்வாதார தீர்வு கிடைக்கும் வகையில் 12 ஆயிரத்து 200 பகுதி நேர ஆசிரியர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு முன் எங்களது கோரிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்து விட்டு வந்து கலைந்து சென்றனர்.


Next Story