இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம்ல ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி பூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் இறைத்தூதராக கருதப்படும் முகமது நபியை இழிவுபடுத்தும் விதமாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது ஷெரீப் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் யாகூப், தலைமை கழக பேச்சாளர் காதர்பாட்சா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசி வரும் பா.ஜ.க.வினர், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி, மாவட்ட ம.தி.மு.க. பொருளாளர் புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமநாதன், நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் உள்பட முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.