வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விராலிமலை வட்டக்கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே அறிவித்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு, பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அரசாணையை வெளியிட வேண்டும் மற்றும் அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விராலிமலை கிளை தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.