தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். 7500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூத்தியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி, பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். துறை ரீதியிலான அரசு ஊழியர் ஓய்வை 58 ஆக குறைத்து காலி பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு பொது அமைதி பாதுகாப்புகளை கேள்விக்குறியாக்கும் போராட்டம் என்ற பெயரில் நெடுஞ்சாலை துறை அலுவலகங்களில் 13 ஆண்டுகளாக சில அமைப்புகளால் அத்துமீறப்படுவது தொடர்கிறது. இனியும் அதை அனுமதிக்காமல் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தர்மராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.