தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர் நொச்சிவயல்புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாலெட்சுமி. இவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த நிலையில் இறந்தார். மாணவிக்கு சிலர் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், அதனால் தான் அவர் இறந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு பிறகு போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் மாணவியின் சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் கொலை வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரமைப்பின் பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.