பழனி மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்


பழனி மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்
x

பழனி மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்

பழனி நகரின் முக்கிய பகுதியாக மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியானது திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, ஆர்.எப்.ரோடு ஆகிய சாலைகள் சந்திப்பு பகுதியாக உள்ளது. மேலும் அருகில் பஸ்நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் பழனி பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா பகுதியில் தான் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கட்சி கூட்டங்களை நடத்துகின்றனர்.

அவ்வாறு அங்கு கூட்டம் கூடும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அங்கு ஒலிபெருக்கி வைத்து அதிக சத்தத்துடன் கோஷம் எழுப்புகின்றனர். இதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே மயில் மற்றும் வேல் ரவுண்டானா பகுதியில் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரவுண்டானாவுக்கு மிக அருகில் தான் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு ஆர்ப்பாட்டம் போன்றவை நடக்கும் போது ஒலிபெருக்கி வைத்து கடுமையான சத்தம் எழுப்புவதால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மயில், வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்றனர்.


Next Story