உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், மாணவியின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பள்ளியில் நடந்த வன்முறைகளை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன், சங்கரன், ராஜேந்திரன், வேல்மாறன், அறிவழகன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






