கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை, ஓய்வூதியர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் பண பலன்களை வழங்க கோரியும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கருப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் லாபத்தில் இயங்கி வந்த என். பி.கே.ஆர்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேடு காரணமாக நஷ்டம் அடைந்து 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதை மீண்டும் திறக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை, ஓய்வூதியர்களின் பண பலன்களை வழங்க வேண்டும், சட்டமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மாற்றம் செய்து நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் மகாபாரதியிடம் மனு அளித்தனர்.