டெங்கு காய்ச்சல் முன்எச்சரிக்கை பணிகள் தீவிரம்
மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 6 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 6 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நேற்றைய நிலவரப்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 6 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிலரும் சிகிச்சையில் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் எந்த வித சிக்கலும் இல்லை எனவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறினர்.
மேலும், மதுரையில் டெங்கு காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இதற்கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 25 குழந்தைகளுக்கான படுக்கைகள், 44 பெரியவர்களுக்கான படுக்கைகள், ஐ.சி.யூ. பிரிவில் பெரியவர்களுக்கு 20 படுக்கைகள், குழந்தைகளுக்கு 15 படுக்கைகள் என மொத்தம் 104 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன.
கொசு வலைகள்
இங்கு கொசு வலைகள் அனைத்தும் படுக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளும் அங்குள்ள நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி டெங்கு வார்டிற்கு தேவையான பணியாளர்களும், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் காய்ச்சல் பாதிப்புடன் 67 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு மட்டுமே டெங்கு உள்ளது. மற்றவர்களுக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பு என்பதால் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு பணிகள்
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நல்ல நீரில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல், குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை சாப்பிடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். அதுபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், முன்எச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.