முக்கொம்பு காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு


முக்கொம்பு காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு
x

முக்கொம்பு காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

ஜீயபுரம்:

மேட்டூர் அணையில் இருந்து வரக்கூடிய நீரானது ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டம் வழியாக சென்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. காவிரி பாலம் 41 மதகுகளைக்கொண்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. காவேரி பாலத்தின் அருகே உள்ள கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த நிலையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது முக்கொம்பு காவிரி பாலத்தின் 35-வது மதகு பகுதி விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் காவிரி பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி பாலத்தின் முன் பகுதியில் இரும்புத்தூண் கொண்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த பாலத்தின் வழியாக அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லும் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. காவிரி பாலத்தின் விரிசல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story