எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு: பொதுமக்கள் சாலை மறியலில் பயங்கர வன்முறை - தடியடி
ஓசூர் அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நடந்த சாலைமறியல் போராட்டம் வன்முறையாக மாறியது. கல்வீச்சில் போலீசார் காயம் அடைந்தனர். வாகனங்கள் உடைக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான அனுமதி நேற்று முன்தினம் அரசிதழில் வெளியானது. தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறையினர் கூட்டு புல தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர். மேலும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல், அத்திப்பள்ளி, கோலார், மாலூர் போன்ற பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை கோபசந்திரம் கிராமத்திற்கு நேற்று காலை 5 மணிக்கு அழைத்து வந்தனர்.
கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கூட்டு புல தணிக்கை இன்னும் நடத்தப்படவில்லை என்றும், ஆய்வு செய்த பின்னரே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.
சாலைமறியல்
இதனால் எருதுவிடும் விழா தொடங்கவில்லை. ஏற்கனவே 2 முறை விழா நடத்த மாடுகளை அழைத்து வந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது 3-வது முறையாக விழா தொடங்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிணதிருப்பதி கோவில் பிரிவு சாலை கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் டிப்பர் லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியும், சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தை தொடங்கினர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் திரண்டனர். இதனால் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எருதுவிடும் விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் ஏற்கனவே 2 முறை அனுமதி தருவது போல் கூறிவிட்டு பின்னர் விழா நிறுத்தப்பட்டதாகவும், தற்போதும் அதேபோல் கூறுகிறீர்கள் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். அதற்குள் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
டி.ஐ.ஜி. விரைந்தார்
இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பொதுமக்களோ கலெக்டர் வந்து எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வோம் என்றும், மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எருதுவிடும் விழா நடத்த அனுமதி தர வேண்டும் என்றும், நேரத்தை நீட்டித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு எழுத்து பூர்வமாக எருதுவிடும் விழா நடத்த அனுமதி தருவதாக கூறினார்.
இதில் சமாதானம் அடையாத மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசார் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீச தொடங்கினர். அவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் சாலையில் ஓசூர், பெங்களூரு செல்வதற்காக நின்ற அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கார், ஜீப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர்.
தடியடி- கண்ணீர்புகை குண்டு வீச்சு
மேலும் போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை தூக்கி வீசினர். அங்கு பெரும் பதற்றம் ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து அங்கிருந்து ஓடினர்.
போலீஸ் சூப்பிரண்டு காயம்
போராட்டக்காரர்கள் கல்வீசியதில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் காயம் அடைந்தார். அவரது காலில் கல் தாக்கி அடிபட்டது. அதேபோல் ஓசூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி கல் வீச்சில் காயம் அடைந்தார். மேலும் பெண் போலீஸ் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை 5 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று செல்லும் போது மோதி கொண்டதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்கள் சேதமடைந்தன.
போக்குவரத்தில் மாற்றம்
சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், பெங்களூரு சென்ற வாகனங்கள் சூளகிரியில் உத்தனப்பள்ளி சாலை வழியாக ஓசூருக்கு திருப்பி விடப்பட்டன. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வந்த வாகனங்கள் ராயக்கோட்டை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று வாகனங்களை சிறிது நேரம் நின்று செல்லுமாறு அறிவுறுத்தினர்.
போராட்டக்காரர்கள் 200 பேரிடம் விசாரணை
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாலை மறியல், வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
எருதுவிடும் விழா நடந்த பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி, விரட்டி பிடித்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து சூளகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் நடந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து சீரடைந்துள்ளதாக சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தெரிவித்தார்.