இந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
விழுப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 7-பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் செயல் அலுவலர், நிலை-3 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெறும் என்றும், தேர்வு எழுத வருபவர்கள், தேர்வு மையத்திற்குள் காலை 9 மணிக்குள் ஆஜராக வேண்டுமெனவும், அதன் பிறகு வருபவர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.
சாலை மறியல்
இந்நிலையில் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சரியாக 9 மணி ஆனதும் தேர்வு மைய நுழைவுவாயில் பூட்டப்பட்டது. அதன் பிறகு சிலர் தாமதமாக வந்தனர். 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை 50-க்கும் மேற்பட்டோர் தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் அங்கிருந்த தேர்வு மைய பொறுப்பாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.இருப்பினும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் தேர்வு மையத்தின் எதிரே காலை 9.25 மணியளவில் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை விதிமுறைகளின்படி தேர்வு மையத்திற்குள் காலை 9 மணிக்குள் இருக்க வேண்டும் என்றும், தேர்வு எழுத தாமதமாக வந்தால் எப்படி அனுமதிப்பார்கள் என்றும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் வீண் இடையூறு செய்யாதீர்கள் என்று போலீசார் அறிவுரை கூறியதன்பேரில் அவர்கள் 9.30 மணிக்கு மறியலை கைவிட்டதோடு தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.