தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் 54 திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் மறுப்பு - டாக்டர் ராமதாஸ் கண்டனம்


தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் 54 திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் மறுப்பு - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x

13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் 54 திட்ட அலுவலர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழக அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 54-க்கும் மேற்பட்டோருக்கு பிப்ரவரி மாத ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதத்துடன் பணி நீக்கப்படவுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

2007-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 13 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வரும் உதவி திட்ட அலுவலர்கள் பணி நிலைப்பு கோருகிறார்கள். ஆனால், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமோ அவர்களை திட்டம் சார்ந்த ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற முயல்கிறது. அது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்

பணி நிலைப்பு கோரி 54 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஆணையிட்டது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி விட்டது. திட்ட ஒப்பந்த பணியாளர்களாக மாற மறுத்தால் பணி நீக்கப்படுவர் என அறிவித்திருக்கிறது.

13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் அரசு தலையிட்டு, அவர்களின் 13 ஆண்டு உழைப்பை மதித்து, ஐகோர்ட்டு அறிவுரைப்படி, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்."

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story