5 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு ஓட்டுபோட அனுமதி மறுப்பு

குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 5 மணிக்கு மேல் வந்தவாகளை ஓட்டுபோட அனுமதிக்காததால் வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி
குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 5 மணிக்கு மேல் வந்தவாகளை ஓட்டுபோட அனுமதிக்காததால் வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வாக்குச்சாவடி முற்றுகை
காலியாக உள்ள குருநல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடியின் கேட் மூடப்பட்டது. 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்கள் மட்டும் வாக்களிக்க நேரம ஒதுக்கப்பட்டது. இந்்த நிலையில் 5.03 மணிக்கு ஒரு பெண் உள்பட 3 பேர் வாக்களிக்க வந்தனர்.
அவர்களை ஓட்டுபோட அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு, வாக்குப்பெட்டியை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மதுவிலக்கு பிரிவு செல்வராஜ் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாக்குச்சாவடி அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் நடைமுறைகளை மீற முடியாது. ஆகவே தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதனைத்தொடர்ந்து இரவு 7.20 மணிக்கு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வடக்கிபாளையம் ஊராட்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் வடக்கிபாளையம் ஊராட்சியில் 2-து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடி அருகில் வந்து வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் முன்னிலையில் வாக்குபெட்டி சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போட்டியின்றி தேர்வு
இதற்கிடையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சிங்காநல்லூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகன் என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார். இதேபோன்று ஆனைமலை ஒன்றியத்தில் வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரவீன்குமாரும், சொக்கனூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரா.அன்னக்கொடியும், நல்லட்டிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுரேசும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.